
ஜெனிவா, மார்ச் 05
“பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் இலங்கையில் தொடர்ந்தும் நீதி மறுக்கப்படுகின்றது” என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார்.
சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிப்பது குறித்து நான் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மேலும் தெரிவிக்கையில்-
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கவனத்தை செலுத்துவதற்கான முக்கிய தேவை உள்ளது. கடந்த வருடம் பொறுப்புக்கூறலுக்கு மேலும் தடைகளும் பின்னடைவுகளும் காணப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் தொடர்ந்தும் நீதி மறுக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் சில பிரிவுகளை திருத்துவதற்கான யோசனைகள், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க ஆரம்ப கட்ட முயற்சிகள். பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான ஆழமான நீதி ஸ்தாபன மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.
சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிப்பது குறித்து நான் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன். இவர்களில் சிலர் மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள். சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பொலிஸார், புலனாய்வுப் பிரிவினரால் துன்புறுத் தப்படுவது அச்சுறுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என்றார்.





