உக்ரைனில் 10 ஆவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல்

உக்ரைன், மார்ச் 05

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதி போர் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷ்யா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. 10 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு ஓட்டம் பிடித்துள்ள பரிதாப நிலையில், இன்னும் 40 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று ஐரோப்பிய யூனியன் கணித்துள்ளது.

ரஷ்ய படையினரின் தொடர் ஏவுகணைகள் வீச்சு, குண்டுமழை, பீரங்கி தாக்குதல், சரமாரி துப்பாக்கிச்சூடு என்று உக்ரைன் உருக்குலைந்து வருகிறது. பெரிய நகரங்களில் கெர்சன் நகரை மட்டுமே பிடித்துள்ள நிலையில் மற்ற நகரங்களையும் பிடிக்க தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

உக்ரைன் நாட்டில்தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் என்று சொல்லப்படுகிற ஜபோரிஜியா அணுமின்நிலையத்தையும் நேற்று ரஷ்ய படைகள் கைப்பற்றின.

உக்ரைன் மீது நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல் 10-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் தொடர்ந்து ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், பாதுகாப்பான முகாம்களுக்கு செல்லுமாறு குடியிருப்பு வாசிகளை கார்கிவ் நகர நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply