இலங்கையில் சிறுபான்மை சமூகங்கள் தொடர்ந்தும் ஓரங்கட்டப்பட்டு வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குற்றச்சாட்டு

சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகள் இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் அவர் சமர்ப்பித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

நில அபகரிப்புக்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் தொல்பொருள் மற்றும் வனப்பாதுகாப்பு எனும் பெயரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் சிறுபான்மை மக்கள் மத்தியில் பல்வேறு பதற்ற நிலைமைகளை தோற்றுவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களிலும் மத மற்றும் இனவாத போக்குகள் அதிகரித்துள்ளது.

அரச சிவில் சேவை பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவது பாரிய கவலையளிக்கிறது.

அத்துடன், பாரதூரமான மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரிக்க உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் மீது பாதிக்கப்பட்டோர் நம்பிக்கையற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் யுதத்தினால் இழந்த அல்லது காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை நினைவு கூற முற்படும் போது பல துன்பங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினரின் உரிமைகளை அங்கீகரிக்கவும் காணாமல் போனோர் தொடர்பான உண்மைகளை விரைவில் கண்டறியவும் அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பிடுகளை வழங்குமாறும் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்கள், சமூக செயற்பட்டாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்கள் தமது சுயாதீனத்தை இழந்துள்ளனர்.

எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டியுள்ளார்.

இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்படவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்கள் கடந்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதி தொடர்பில் எவ்வித நம்பகமாகன வழிமுறைகளையும் உள்ளடக்கவில்லை.

குற்றவியல் சட்டக் கண்ணோட்டத்தில் தமது குழு சாட்சியங்களை சேகரித்து அவற்றை பகுப்பாய்வு செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அனைத்து தரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதெச குற்றங்களை விசாரித்து அவற்றுக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு வரையறைகளின் கீழ் தண்டனைகளை பெற்றுக் கொடுக்க 46 இன் கீழ் 01 தீர்மானம் ஆவண செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தண்டனையிலிருந்து தப்பித்திருக்கும் செயன்முறை தொடரும் வரை இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply