
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் மாதம் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி பத்தொன்பதாம் திகதி அதிகாலை காரைநகர் கோவளம் கடற்பரப்பில் நாட்டுப்படகில் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதில் இருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது மார்ச் மாதம் நான்காம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சந்தேக நபர்கள் மன்றில் முன்னிறுத்தப்படாத நிலையில் மீனவர்கள் சார்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் குறித்த மீனவர்கள் கொரோனாத் தொற்று அச்சம் காரணமாக வாக்குமூலம் பெறவில்லை எனவும், எனவே சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறும், அதுவரை பதின்நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவானிடம் தமது விண்ணப்பத்தை கோரியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதவான், மீனவர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதியளித்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேகநபர்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.





