
இழுவைமடி முறையால் வடஇலங்கை மற்றும் தமிழ்நாட்டு சிறு கடற்தொழிலாளர்களின் எதிர்காலமே அழிக்கப்படுகின்றது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடஇலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்தொழிலில் தங்கியிருக்கும் சுமார் இரண்டு இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.
30 வருட கால யுத்தத்தால் சொல்லமுடியாத துயரங்களையும் அழிவுகளையும் நாங்கள் சந்தித்துள்ளோம். யுத்தம் காரணமாக வெளிமாவட்டங்களிலும் தென்னிந்தியாவிற்கும் என தொடர்ச்சியான இடப்பெயர்வுகளையும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களையும் சந்தித்திருந்தோம்.
யுத்த காலத்தில் எமது சமூகத்திற்கு அடைக்கலம் தந்தமைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு முதற்கண் எமது நன்றியினை தெரிவிக்கின்றோம்.
யுத்தத்திற்குப் பின்பு எமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப கடுமையாக முயற்சித்த போதிலும் பல சவால்களையும் தோல்விகளையுமே நாம் சந்திக்க நேர்ந்தது. வருமானத்தின் வீழ்ச்சி மற்றும் பெரும் கடன் சுமை காரணமாக எமது இளம்தலைமுறை கடற்தொழிலையே கைவிடும் நிலமை ஏற்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு பின்பான இந்த சமூக பொருளாதார சூழலுக்கான முக்கிய காரணம் தமிழ் நாட்டு இழுவைப் படகுகள்.
இந்த இழுவைப் படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வலைகளை அறுத்துச் செல்வதனால் பெரும் இழப்புக்கள் ஏற்படுகின்றன. மேலும், சொத்து இழப்புக்களைத் தவிர்க்க நாம், இழுவைப் படகுகள் வரும் நாட்களில் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் பெருமளவான வருமானத்தை இழக்கின்றோம்.
கடல் வளங்களைச் சுரண்டும் இழுவை மடிகளால் சிறு மீனவர்களின் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இழுவை மடி முறையால் வட இலங்கை மற்றும் தமிழ் நாட்டு சிறு கடற்தொழிலாளர்களின் எதிர்காலமே அழிக்கப்படுகின்றது.
இந்தப் பிரச்சினை வட இலங்கை கடற்தொழிலாளர்களுக்கும் , தமிழ் நாட்டுக் கடற்தொழிலாளர்களுக்கும் இடையில் இருக்கும் வரலாற்று ரீதியான உறவையே பாதிக்கின்றது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது





