மட்டக்களப்பு – நீலாவணையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாக்கியராஜா மோகனதாஸ் எழுதிய “படைப்பாக்க ஆளுமைகள் ” எனும் நேர்காணல் அடங்கிய நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை (05) திருகோணமலை சர்வோதயத்தில் இடம்பெற்றது.
திருகோணமலையில் கலைப்பணி புரியும் “நீங்களும் எழுதலாம்” வாசகர் வட்டம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இவ் நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.சிறிபதி கலந்து கொண்டார்.சிறப்பு அதிதிகளாக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் முஹமட் நௌபர், சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் வீ.கோணேஸ்வரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர் பாக்கியராஜா மோகனதாஸின் “படைப்பாக்க ஆளுமைகள்” எனும் நூல் வெளியீட்டு விழாவில் ஆசியுரை வழங்கி முதல் பிரதியை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வேதாகாமமணி பிரம்மசிறி சோ.இரவிச்சந்திரக் குருக்கல் பெற்றுக் கொண்டார்.
நூலுக்கான நயவுரையை கவிஞர் க.யோகானந்தன் வழங்கினார்.இந் நூலானது 424 பக்கங்களை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








