
பிரான்ஸ், மார்ச் 06
உக்ரைனில் உள்ள 5 முக்கிய அணுசக்தி தளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் முன்மொழியும் என்று அதன் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அலுவலகம் தெரிவித்தது.
உக்ரைன் நாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின்நிலையம்தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் ஆகும். அதன் மீது நேற்று முன்தினம் ரஷ்யா தாக்குதல் தொடுத்து தன்வசப்படுத்தியது.
இந்த தாக்குதலால் அந்த அணுமின்நிலையத்தின் ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. 3 பேரை பலி கொண்ட இந்த சம்பவம் உலகை உலுக்கியது. இது கதிர்வீச்சால் பேரழிவுக்கு வழிநடத்திவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.
சர்வதேச அணுசக்தி முகமையின் அளவுகோல்கள் அடிப்படையில் பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் விளைவாக அணுசக்தி பாதுகாப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பை செயல்படுத்துவதில் ஏற்படும் ஆபத்து குறித்து மேக்ரான் கவலை கொண்டுள்ளார் என்றும் பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





