வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலியாகினர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஒன்று திரண்டமையால் குறித்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.
வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் மன்னார் பறயநாலங்குளம் பிரதான வீதியில் குறித்த விபத்துசம்பவம் இடம்பெற்றது.
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்து கொண்டிருந்த தனியார் பேருந்து குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, உள்வீதியில் இருந்து பிரதானவீதிக்கு ஏறிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகியதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
விபத்தையடைந்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் பேருந்தினை தாக்கியமையால் குறித்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பூவரசங்குளம் பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். எனினும் அது பலனளிக்காத நிலையில் விசேட அதிரடிப்படையினர் களத்திற்கு அழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சம்பவத்தில் குருக்கள் புதுக்குளம் பகுதியை சேர்ந்த சிறிதரன் (வயது 46) மற்றும் அவரது 14 வயது மகனான டினோகாந் ஆகிய இருவரே மரணமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.







