
இலங்கைக்கு போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளது. நாடு முழுவதற்குமான விநியோகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.- இவ்வாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாணத்துக்கு போதுமானளவு டீசல், மண்ணெண்ணெய், பெற்றோல் என்பனவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து புறப்பட்ட 33 ஆயிரம் லீற்றர் கொள்ளளவுடைய பவுஸர்கள் சில நேற்றிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளன.
எஞ்சிய பவுசர்கள் இன்று மதியத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வந்துள்ளன. எரிபொருளை இறக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.எனவே எரிபொருள் தட்டுப்பாடு என்று நுகர்வோர் பீதியடைய வேண்டாம்.
வரிசையில் நிற்பதைத் தவிர்த்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளமுடியும். நுகர்வோர் சாதாரண வரம்பை விட அதிகமாக எரிபொருள் நிரப்புவதும், ’கான்’கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை கொள்வனவு செய்து இருப்பு வைப்பதும் தட்டுப்பாட்டுக்கு காரணமாகின்றது.
மேலும் நாளையும், நாளை மறுதினமும் மேலும் இரு கப்பல்களிலிருந்து தொடர்ச்சியாக எரிபொருள் இறக்கப்படவுள்ளது என்றார்.





