முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கி.சிவநேசனின் 14ம் ஆண்டு நினைவு நாளான இன்று (06) அவரது வித்துடல் புதைக்கப்பட்ட மல்லாவி, அணிச்சியன் குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் அவரது கட்சியினர் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
வட மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் பேரிணையத்தின் முன்னாள் பொது முகாமையாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சிவநேசனின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை ஏற்று 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் தேர்தல் மாவடடத்தில் போட்டியிட்டு 43730 வாக்குக்களை பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகினார்.
தமிழ் மக்களை தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின்னால் மக்களை அணி திரட்டும் பணியில் தாயகத்திலும் புலம் பெயர்ந்த மண்ணிலும் ஈடுபட்டவர்.
ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் பல தடவை பயணம் செய்த இவர் ஐரோப்பிய நாட்டின் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல இராஐதந்திரிகளையும் அந்தந்த நாடுகளில் சந்தித்து தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகள் தொடர்பாகவும், தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்டு வரும் இன அழிப்பு தொடர்பாகவும் எடுத்துரைத்து சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டுவதில் பெரும் பங்காற்றியவர்.
அச்சுறுத்தல்கள் தனக்கெதிராக தொடாந்து கொண்டிருந்த பொழுதும் கூட மிரட்டல்களுக்கு பணியாது தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த நம் மாமனிதர் சிவநேசனும் சாரதி பெரியண்ணன் மகேஸ்வரராஜாவும் 06.03.2008 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இருந்து மல்லாவி நோக்கி சென்று கொண்டிருந்த போது பிற்பகல் 1.10 மணியளவில் கொல்லர் புளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.
தேசியத்தலைவர், மாமனிதர் எனும் அதியுயர் விருதினை வழங்கியதுடன், வித்துடல் மல்லாவி அணிச்சியன் குளம் பிரதேசத்தில் பிரத்தியேகமாக விதைக்கபட்டது. விதைக்கப்பட்ட இடத்தில் இருந்த கல்லறை அழிவடைந்து காணப்பட்ட நிலையில் அவரது 14 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குறித்த இடத்தில் அவரது கல்லறை அமைக்கப்பட்டது.
குறித்த கல்லறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி சார் உறுப்பினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.







