
நாட்டின் இன்றைய தினமும் சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக இந்த துண்டிப்பு அமுலாக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாணந்துறை, ஹொரனை, களுத்துறை, மத்துகம, அம்பலாங்கொடை உள்ளிட்ட இடங்கள் பலவற்றில் நேற்றிரவு திடீர் மின் தடை ஏற்பட்டது.
தற்போதைய மின்சார பிரச்சினை தொடர்பில் இன்றைய தினமும் வலுசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினமும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், புதிய வலுசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு தற்போதைய மின்சார பிரச்சினை தொடர்பில், அமைச்சின் அதிகாரிகளால் தெளிவூட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்றைய தினம் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் ஏனைய காரணிகள் தொடர்பில் அதிகளவில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





