
சான் பிரான்சிஸ்கோ, மார்ச் 07
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 11 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷ்யா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது.
இந்த 11 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷ்யா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது.
இந்நிலையில்,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால், ரஷ்யா மற்றும் பெலாரசில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
இதன் விளைவாக, உலகளவில் வழங்கப்படும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் இனி ரஷ்யாவில் உள்ள வணிகர்கள் அல்லது ஏ.டி.எம்.களில் வேலை செய்யாது. மேலும், ரஷ்ய வங்கிகளால் உள்நாட்டில் வழங்கப்படும் கார்டுகள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உலகளாவிய நெட்வொர்க்கில் நாட்டிற்கு வெளியே வேலை செய்யாது.
இதேபோல பெலாரசிலும் உள்ள அனைத்து வணிக நடவடிக்கைகளையும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் சர்வதேச தடைகளால் பாதிக்கப்பட்ட, ரஷிய வங்கிகளுடனான உறவுகளை ஏற்கனவே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக ரஷியாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு தனது செயல்பாடுகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.





