பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத காட்மோர் பிரதான பாதை – சீர் செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உற்பட்ட காட்மோர் பிரதான பாதை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன சாரதிகள் போக்குவரத்தின் போது பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த வீதி யானது கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம்  நிதி ஒதுக்கீட்டில் மல்லியப்பூ சந்தியில் இருந்து காட்மோர் சந்தி வரை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மல்லியப்பூ சந்தியில் இருந்து மோக்கா தமிழ் வித்தியாலயம்  வரையான மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்று அதன் பணியை முழுமையாக செய்து முடித்துள்ளது.

மோக்கா பாடசாலை முதல் காட்மோர் சந்தி வரையான மூன்று கிலோமீட்டர் தூரத்தை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் (TRUST) பொறுப்பேற்று மோக்கா தோட்ட காரியாலயம் வரை மட்டும் செப்பனிட்டு மிகுதியான 1.5 கிலோ மீட்டர் தூரமான வீதி யானது செப்பனிட படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

குறித்த வீதி குன்றும் குழியுமாக உள்ளதால் கர்ப்பிணி தாய்மார்கள் நோயாளிகள் முதல் பாடசாலை பிள்ளைகள் வாகன சாரதிகள் வரை பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் காட்மோர் பகுதியில் பிரசித்தி பெற்ற நீர் வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு உல்லாச பயணிகள் தினமும் நூற்றுக்கணக்கில் வருகை தருவதை காணக்கூடியதாக உள்ளது.

அவ்வாறு வருகை தரும் உல்லாச பயணிகள் தமது சொகுசு வாகனங்களை இடைநடுவில் நிறுத்தி வைத்துவிட்டு நடந்து செல்ல வேண்டி உள்ளதாகவும் அவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் வாகனத்தில் உள்ள சில முக்கிய பொருட்கள் களவாடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நோயாளிகளை கொண்டு செல்ல குறித்த இடத்திற்கு வரும் 1990 நோயாளர் காவு வண்டி இடையில் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தமது அன்றாட பிரச்சினைகளை செய்து கொள்வதில் தாம் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 இது குறித்து  சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தி தமக்கான தீர்வை பெற்று தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இப்பகுதியில் உள்ள காட்மோர் தோட்ட ஆறு பிரிவில் உள்ள பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *