
மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரச அதிபராக கடமையாற்றிய எஸ்.குணபாலன் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக (காணி) தனது கடமைகளை கடந்த வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவர் தனது கடமைகளை, முதல் மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தினை பூர்வீகமாகக் கொண்ட இவர் 1996ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எழுதுநராக அரச சேவைக்குள் கால்பதித்தார்.
தொடர்ந்து நவம்பர் மாதம் வரை எழுதுநராகக் கடமையாற்றியதைத் தொடர்ந்து ஆசிரியசேவையில் இணைந்து 2004ம் ஆண்டு யூன் மாதம் 30ம் திகதி வரை ஆசிரியராகக் கடமையாற்றினார்.
2004ம் ஆண்டு ஜீலை முதலாம் திகதி தொடக்கம் திறந்த போட்டிப் பரீட்சையூடாக இலங்கை நிர்வாக சேவையினுள் இணைந்து கொண்டதையடுத்து, 2004ம் ஆண்டு ஒக்டோபர் 03ம் திகதி வவுனியா மாவட்ட உதவித்தொழில் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
2008ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ம் திகதி தொடக்கம் வடக்கு பிரதித் தொழில் ஆணையாளராகவும் கடமையாற்றியவராவார்.
மேலும் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ம் திகதி தொடக்கம் 2016.03.08ம் காலப்பகுதி வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரதேச செயலாளராகவும் அதே காலப்பகுதியில் இரு ஆண்டுகள் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும் கடைமையாற்றியவராவார்.
இக் காலப்பகுதியில் 2014.ஜீலை.01ம் திகதி இலங்கை நிர்வாக சேவையில் தரம் இரண்டு பதவியினை பெற்று மறுதினமே தரம் ஒன்றுக்கான பதவியினை பெற்றுக்கொண்டார்.
2016ம் ஆண்டு மார்ச் மாதம் 09ம் திகதி தொடக்கம் 2018.02.27ம் காலப்பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளராகவும் அதேகாலப்பகுதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார்.
தொடர்ந்து 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ம் திகதி தொடக்கம் கடந்த புதன்கிழமை(03) வரை மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபராக (நிர்வாகம்) கடமையாற்றினார்.
அத்துடன், இவர் MA(pub ad), BA(Hons), Pgd(Dev), Pgd(Education), Dip in English, CDL(SLIDA) உள்ளடங்கலான பட்டங்கள் மற்றும் பட்டயச்சான்றிதழ் கற்கைகளை பூர்த்தி செய்த எஸ்.குணபாலன் கனடா, சுவிஸ்லாந், இந்தோனேசியா, இந்தியா, சிங்கப்பூர், ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, டென்மார்க், அவுஸ்ரேலியா, மலேசியா முதலான நாடுகளிற்கு சென்று நிர்வாகத்துறை சார்ந்த வெளிநாட்டு விசேட பயிற்சிகளை பெற்றுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது நியமனத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த மேலதிக அரச அதிபர்(காணி) வெற்றிடமானது பூர்த்திசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





