
கோமா அரசின் கீழ் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின், யாழ் மாவட்ட அமைப்பாளர், இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
இந்த அரசின் கீழ் வாழும் மக்கள் பாரிய நெருக்கடிகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.கொரோனா நிலை தணிந்து வரும் நிலையில், மக்கள் மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
எரிபொருளுக்கு வரிசை, மின்சாரம் ஏழு அரை மணித்தியாலம் துண்டிக்கப்படுகிறது. இதனால் அன்றாட வேலை, மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் சொல்ல தேவையில்லை. பாணின் விலை நூறு ரூபாய்க்கு செல்லும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையை நாம் பார்க்கும் போது உணர்ச்சி இல்லாத, கோட்டா அரசு கோமா நிலைக்கு சென்று விட்டது என்று தான் கூற வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நிலமை காணப்படுகிறது. அதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என அரசு கூறுகிறது. இவர்களுக்கு நாம் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
கொரோனா காரணமாக வெளிநாட்டு வருவாய் இல்லாமல் போய் உள்ளது. அது உண்மை. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 2020 ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டு வெளிநாட்டு வருவாய் அதிமாக காணப்படுகிறது.
ஏனைய நாடுகளுக்கும் கொரோனா பிரச்சினை காணப்பட்டது. இந்த நிலையிலும் அவர்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இதை ஏன் எமது அரசால் செய்ய முடியாமல் உள்ளது. – என்றார்.





