தேசிய கால்பந்தாட்ட அணி வீரர் காலம் சென்ற டக்ஸன் பியூஸ்லஸின் உடல் ஆயிரக்கணக்கான மக்களின் அஞ்சலியின் பின்னர் நல்லடக்கத்திற்காக இன்று திங்கட்கிழமை மதியம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மன்னார் – பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸின் மாவட்ட அணி, மாகாண கால்பந்தாட்ட அணி மற்றும் தேசிய அணி வீரராக பிரகாசித்து வந்த நிலையில் மாலைதீவு கழக அணி ஒன்றுக்காக ஒப்பந்த ரீதியாக விளையாடிவந்த நிலையில் உயிரிழந்தார்.
அன்னாரின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணியளவில் ஊர்வலமாக நல்லடக்கத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள், இலங்கை உதைபந்தாட்ட அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வடமாகாண கால்பந்தாட்ட அணி வீரர்கள், மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாத்திரம் அல்லாது ஆயிரக்கனக்கான மக்கள் பியூஸின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
பியூஸின் உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டுக்கு பின்னர், மன்னார் பொது மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.








