அவசர அமைச்சரவை மறுசீரமைப்பால் ஆளும் கட்சிக்குள் பிரச்சினை

ஜனாதிபதி மேற்கொண்ட அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு அரசாங்கத்திற்குள் மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை என்பதால், ராஜாங்க அமைச்சர்கள் சிலர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இவ்வாறு அதிருப்தியடைந்துள்ள ராஜாங்க அமைச்சர்களில் லொஹான் ரத்வத்தே முக்கியமானவர் என கூறப்படுகிறது. இந்த அதிருப்தி காரணமாக ஏற்கனவே சில அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் செய்தது போல், லொஹான் ரத்வத்தே, தனது அமைச்சில் இருந்த தனிப்பட்ட உடமைகளை எடுத்துச் சென்றுள்ளதாக பேசப்படுகிறது.

தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்காது, எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்கியமை தொடர்பாகவும் ரத்வத்தே அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும், எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்கியதால், ரவத்தே அதிருப்தியடையவில்லை எனவும் திலும் அமுனுகமவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ளமை பதவியை வழங்கியதன் காரணமாகவே அவர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

லொஹான் ரத்வத்தே மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்குகளை அடிப்படையாக கொண்டு இருவருக்கும் இடையில் பகிரங்கமாக மோதலும் ஏற்பட்டது.

அத்துடன் இவர்கள் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டே முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர். இதனால், இரண்டு பேருக்குமான அரசியல் முதிர்ச்சி சம அளவானது. மேலும் லொஹான் ரத்வத்தே பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர் என கருதப்படுகிறது.

எனினும் அண்மைய காலத்தில் மது போதையில் பெண்ணொருவருக்கு தூக்கு மேடையை காண்பிக்க வெலிகடை சிறைச்சாலைக்கு சென்ற சம்பவம் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சம்பவம் ஆகியன காரணமாக அவர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது.

திலும் அமுனுகமவை தவிர கண்டி மாவட்டத்தை சேர்ந்த மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகின்றனர்.

அளுத்கமகேவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியை வழங்கி, தனக்கு அமைச்சு பதவியை வழங்காது போல் நஞ்சு அருந்துவேன் என கெஹெலிய கடந்த பொதுத் தேர்தலின் போது பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்த விடயங்களை நோக்கும் போது கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் இடையில் ஏனைய மாவட்ட அரசியல்வாதிகளை விட பதவிகள் சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பது தெளிவாகியுள்ளது.

Leave a Reply