
கல்வி அமைச்சினால் தொகுதிவாரியாக மாணவர்களை மீள அழைக்கும் நடவடிக்கைகளால் இன்று பாடசாலையில் மாணவர்களின் வருகைப்பதிவு வெகுவாகக் குறைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வகுப்புகளை சீரற்ற முறையில் நடத்தினால் மூன்றாம் தவணைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவது நடைமுறைச் செயல் அல்ல என சங்கத்தின் பிரதம செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினால் ஒட்டுமொத்த பாடசாலைகளும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. முழுமையாக ஆய்வு செய்யாமல் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார நெருக்கடியால் கல்வித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை போக்குவரத்துச் சேவைகளும் எரிபொருளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றது.
போக்குவரத்து சேவையில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





