
தேர்தலின் போதான கட்சிகளின் சுயலாப நோக்கங்கள், கட்சித் தலைவர்களின் சுயநல ஏக்கங்கள் போன்றன தனிப்பட்ட விரோத மனப்பாங்குகளைத் தாண்டி நாம் ஒற்றுமை காப்பது அவசியம். இன்றைய சூழலைப் புரிந்து கொண்டு காய் நகர்த்துவதே தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களின் இன்றைய தலையாய கடப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆவர் அனுப்பிவைத்துள்ள அறிக்iயில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்கள் என்று இன்று அடையாளப்படுத்தப்படுபவர்கள் பலவித ஆதி மக்களின் வாரிசுகள். இலங்கைத் தமிழர்களின் பூர்வீகத்தைப் பார்த்தால் வரலாற்று ரீதியாக எமது ஆதிகால முன்னோர்கள் குமரிக்கண்ட வாசிகளாக இருந்திருக்கலாம்.
அதன் பின் பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், சேரர்கள் இங்கு வந்ததால் அவர்களின் வழித்தோன்றல்களும் எம்முடன் கலந்திருந்தார்கள். ஆரிய சக்கரவர்த்திகளின் வாரிசுகளும் இங்கு வந்து எம்முடன் கலந்தார்கள். அண்மைக் காலத்தில் பிரித்தானியர்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வந்த மக்களும் எம்முடன் கலந்துள்ளார்கள்.
எம்மை எல்லாம் இணைக்கும் ஒரு மாபெரும் கருவி தான் தமிழ் எனப்படும் மொழி. அதைக் கூட பலர் பலவிதத்தில் பேசுவார்கள். எனினும் நாம் யாவரும் எம்மைத் தமிழர்கள் என்றே அடையாளம் காட்டி வருகின்றோம்.
குறைகள் என்று கூறும் போது எந்த ஒரு மனிதனும் குறைகளுக்கு அப்பாற்பட்டவராக இவ்வுலகில் வாழ்ந்ததில்லை. சகல சம்பத்துக்களுக்கும் அதிபதியாக இருந்த ஆஜானுபாவரான இராமபிரான் கூட குற்றங்களுக்கு அப்பாற்பட்டவராகக் கருதப்படவில்லை. மறைந்திருந்து வாலியைக் கொன்றதால் இன்றும் குற்றத்திற்கு ஆளாக்கப்படுகின்றார். நிறைமாதக் கரப்பிணியான சீதையை வனத்திற்கு அனுப்பியதால் இன்றும் குறை கூறப்பட்டு வருகின்றார்.
தெய்வீக யேசு பிரானைப் போல குற்றமில்லாதவர்கள் வேண்டுமெனில் கல்லை வீசலாம் என்று இன்று நாமும் கூறவேண்டிய நிலையில் உள்ளோம். எமது கட்சித் தலைவர்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள் தாம் குற்றம் அற்றவர்களாக முதலில் இருக்க வேண்டும்.
அண்மைக்கால மனிதருள் மிகவும் விவேகியாகக் கருதப்பட்ட விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்ரைன் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டிருந்தார். அதாவது நாம் இன்றைய ஒரு நிலையை மதிப்பீடு செய்யும் போது அதன் தொடக்கத்தில் இருந்த சூழலையும் மதிப்பீடுகளையும் வைத்து இன்று கணிக்கக்கூடாது என்றார்.
இவற்றை நான் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் எமது வரலாற்று வேற்றுமைகளையும், பழங்கால சேர சோழ பாண்டிய மனோநிலை வேறுபாடுகளையும் அண்மைக்கால அரசியல் முரண்பாடுகளையும் முன்வைத்து எமது எதிர்கால மார்க்கத்தை நாங்கள் வகுக்கக்கூடாது என்று அன்புடன் உங்கள் யாவர்க்கும் எடுத்துக் கூறுவதற்காகத்தான்.
எமது மொழி, கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, மருத்துவப் பாரம்பரியங்கள் போன்றவை தொடர்ந்தும் இந்த நாட்டில் நிலைக்க வேண்டும் என்றால் எமது ஒற்றுமை இந்தக் கால கட்டத்தில் எமக்கு மிக மிக அவசியம் ஆகின்றது.
இந்த நாடு ஒற்றுமையுடன் நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து தமிழ்த் தலைவர்கள் சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் போது அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஆனால் சிங்களத் தலைவர்களின் மனதில் ஒரு சிறுபான்மையின மனோசிக்கல் (Inferiority complex) பொதிந்திருந்ததை யாரும் அடையாளம் காணவில்லை.
இலங்கையின் ஆட்சிமுறை வரலாற்றில் இடம்பெற்ற அரச பேரவைக் காலத்தின் போது (State Council) D.B.ஜயதிலக தலைமைத்துவத்தின் கீழ் ஒரு ‘சிங்களவர் மட்டும் அரசப் பேரவை’ (Pan Sinhala State Council) உருவாக்கப்பட்டது. அதற்கு அடி எடுத்துக் கொடுத்தவர் பிற்காலத்தில் அடங்காத் தமிழர் முன்னணி என்ற அரசியற்கட்சியின் தலைவராக விளங்கிய பேராசிரியர் சி.சுந்தரலிங்கம்.
ஆட்சியானது சுதந்திரத்தின் பின்னர் சிங்களத் தலைவர்களின் கைகளில் நிலைக்க வேண்டும், இதற்குத் தமிழர்களைக் கருவிகளாகப் பாவிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதிருந்தே சிங்களத் தலைவர்களின் மனதில் எழுந்துவிட்டது. நாடு இதற்காக ஒற்றையாட்சியின் கீழ் மட்டுமே சுதந்திரத்தின் பின்னர் நிலைக்க வேண்டும் என்ற பேரவா சிங்களத் தலைவர்கள் மனதை அப்பொழுதிருந்தே ஆக்கிரமித்திருந்தது. பின்வரும் இரு நூல்கள் இதற்கு சான்று பகர்கின்றன.
1.Don Stephen Senanayake – First Prime Minister of Sri Lanka by H.A.J.Hulagalle – Vijitha Yapa Publication
2.O.E.G – A biography of Sir Oliver Earnest Goonetilleka by Sir Charles Jeffries – London Pall Mall Publication
டி.எஸ்.சேனநாயகவும், ஒலிவர் குணதிலகவும் நாடு ஒற்றையாட்சியினுள் அமுங்கிக் கிடக்க வேண்டும் என்ற பேரவாவினால் உந்தப்பட்டு, ஒலிவர் இலண்டன் சென்று பிரித்தானிய அரசாங்கத்தால் இங்கு அனுப்ப உத்தேசிக்கப்பட்டிருந்த சோல்பரி ஆணைக்குழுவின் பிரதிநிதிகளைக் கண்டு அதற்கான ஆரம்ப ஆயத்தங்களை எடுத்திருந்தார்.
பிரித்தானியர்கள் இலங்கைக்கு சமஷடி முறையிலான ஒரு அரசியல் யாப்பைத் தரக் கூடாது என்பதை உறுதி செய்ய பல திருகுதாளங்களில் அவர்கள் இருவரும் ஈடுபட்டார்கள். அந்த காலகட்டத்தில் SWRD பண்டாரநாயக்கஇலங்கைக்கு சமஷ;டி முறையே சிறந்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். கண்டிய சிங்களத் தலைவர்களும் அதே மனோநிலையைத்தான் கொண்டிருந்தார்கள். எங்கே அவர்களின் எதிர்பார்ப்பு பலித்துவிடுமோ என்ற பயத்தில்த்தான் டி.எஸ்.சேனநாயகவும், ஒலிவர் குணதிலகவும் சேர்ந்து பல தில்லு முல்லுகளில் ஈடுபட்டார்கள். இவற்றை எல்லாம் வெளிக்கொண்டுவரும் விதத்தில் பட்டயம் பெற்ற கணக்காளர் நண்பர் செல்வேந்திரா சபாரட்ணம் தற்போது நூலொன்றைத் தயாரித்து வருகின்றார்.
ஆகவே சிங்கள மக்கட் தலைவர்களின் சதியின் நிமித்தமே இலங்கைக்கு ஒற்றையாட்சி முறை கிடைத்தது. அப்போதைய தமிழ்த் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் சமஸ்டி முறையை விரும்பவில்லை. காரணம் சமஷ;டி முறை தமிழர்களை இலங்கையின் ஒரு கோடிக்கு அனுப்பிவிடும்; முழு இலங்கையிலும் தன்னைப் போன்றவர்கள் தமது தொழிலில் கொடி கட்டிப்பறக்க அது இடம் கொடுக்காது என்ற எண்ணமாய் இருந்திருக்கக்கூடும்.
இதனால் ஒற்றையாட்சிக்குள் எவ்வாறு சிறுபான்மையினர் மதிப்புடன் வாழ முடியும் என்ற கேள்வியை அவர் எழுப்பி அதற்கு விடையையுங் கண்டு பிடித்தார். ஐம்பதுக்கு ஐம்பது என்ற அவரின் தீர்வே அது. ஐம்பதுக்கு ஐம்பது என்றால் ஒற்றையாட்சியின் கீழ் பெரும்பான்மையினருக்கு 50 சதவீதமான பாராளுமன்ற ஆசனங்கள் சிறுபான்மையினர் அனைவருக்குஞ் சேர்த்து 50 சதவீத ஆசனங்கள் என்று பொருள்படும். அதாவது பெரும்பான்மையினர் தமது 50 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு எந்த ஒரு சிறுபான்மையினத்தையும் பாதிக்கும் விதத்தில் சட்டம் இயற்ற முடியாது. சிறுபான்மையினர் ஒன்றுபட்டு நின்றால் இது சாத்தியமாகும்.
ஆனால் அவர் ஒன்றை மறந்துவிட்டார். பதவிக்காகவும் பணத்திற்காகவும் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய மக்கட் தலைவர்கள் அப்போதும் இருந்தார்கள், இனியும் இருப்பார்கள் என்பதை மறந்துவிட்டார். ஆகவே சிறுபான்மையினத் தலைவர்களைப் பெரும்பான்மையினர் கொக்கி வைத்து தமது பக்கத்திற்கு இழுத்துவிட ஐம்பதுக்கு ஐம்பதில் இடமிருந்தது. சோல்பெரி ஆணையாளர்கள் ஐம்பதுக்கு ஐம்பதை ஏற்கவில்லை. தமிழ்த் தலைவர் ஜீ.ஜீ சமஷ;டியைக் கேட்கவில்லை. இன்றும் தமிழ்க் காங்கிரசின் யாப்பு ஒற்றையாட்சியையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதன் வாரிசுக் கட்சி கூட தமிழர் ஐக்கியத்தைக் குழி தோண்டிப் புதைக்கவே காத்துக் கொண்டிருக்கின்றது. அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அந்தத் திக்கையே சுட்டிக்காட்டிக் கொண்டு நிற்கின்றன.
சோல்பெரி அரசியல் யாப்பு ஒற்றையாட்சியையே சுட்டி நின்றது. பெரும்பான்மையினர் நினைத்ததைச் செய்து முடிக்க அரசியல் யாப்பு இடமளித்தது. சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காக சோல்பெரி ஆணையாளர்கள் அவர்களின் அரசியல் யாப்பில் உள்நுழைத்த உறுப்புரை 29(2)ன் ஏற்பாடுகளுக்கு முரணாகவே ‘சிங்களம் மட்டும்’ கொண்டு வரப்பட்டது. ‘சிங்களம் மட்டும்’ சட்டம் அரசியல் யாப்பின் உறுப்புரை 29(2)ன் ஏற்பாடுகளுக்கு முரணானது என்று மாவட்ட நீதிமன்றத்தில் (பறங்கிய வம்சாவளியினரான) டி க்ரெட்சர் என்ற நீதிபதி, கோடீஸ்வரன் வழக்கில் தீர்ப்பளித்திருந்தார். ஆனால் வழக்கின் மேன்முறையீட்டைத் திசை திருப்பி பிரிவி கவுன்சில் (Privy Council) வரை கொண்டு சென்று, அவர் தந்த தீர்ப்பை மழுங்கச் செய்துவிட்டன தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மையின அரசாங்கங்கள்.
தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிங்கள மக்கட் தலைவர்கள் ஒற்றுமையுடன் நடந்துகொள்வதை நாம் பார்த்து வருகின்றோம். ‘ஒரு மொழி இரு நாடுகள், இரு மொழிகள் ஒரு நாடு’ என்று கூறிய சரித்திர வல்லுநர், சட்ட வல்லுநர், இடது சாரிக் கொள்கையாளரான கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா தான் 1972ம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பைக் கொண்டு வந்தார். அதனூடாக முன்னைய அரசியல் யாப்பின் உறுப்புரை 29(2) நீக்கப்பட்டது. அரசியல் யாப்பில் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம் நிலை நிறுத்தப்பட்டது. அதையொட்டியே 1978ம் ஆண்டின் அரசியல் யாப்பும் வகுக்கப்பட்டது. இன்று சிங்கள பௌத்த பெரும்பான்மையினர் நாட்டை சிங்கள பௌத்த நாடாக மாற்ற பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள். புதிய அரசியல் யாப்புத் தயாரிப்பு அந்தத் திக்கையே சுட்டிக் காட்டிக் கொண்டு நிற்கின்றது.
இப்பொழுது தான் சிறுபான்மையினரின் ஒற்றுமை வெகுவாக வேண்டப்படுகிறது. இதை இன்றைய மலையக மற்றும் முஸ்லிம் தலைவர்கள் சிலர் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் தமிழ்த் தலைவர்கள் சிலரினுள் ஆணவம் தலை விரித்தாடுகின்றது. தமிழ்த் தலைவர்கள் இடையே ஐக்கியம் ஏற்படுவதை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.
இந் நிலையிலே இன்றையத் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களின் சிந்தனைகளையும், மனோநிலையையும், உலக அரசியல் நிலையையும், இந்திய இலங்கை உறவு நிலையையும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் குறிக்கோள்களையும் அதன் நடவடிக்கைகளையும் நாட்டின் நிதி நிலைமைகள், யதார்த்த நிலைகள் போன்ற பலவற்றையும் மனதிற் கொண்டு கருமமாற்ற வேண்டிய ஒரு கடப்பாட்டிற்குள் தள்ளிவிடப்பட்டுள்ளார்கள். எங்களை நாங்களே விமர்சித்துக் கொண்டு ஒருவர்க்கொருவர் முட்டுக்கட்டைகளை அடுத்தவர் முன்வைத்துக் கொண்டு நாங்கள் தொடர்வது எமக்கு அழிவையே தரும்.
சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுடன் கைகோர்த்து நின்று அரசியல் செய்யும் எமது தமிழ் அரசியல்வாதிகள் சுயமுன்னேற்றத்திற்காகச் சிங்களப் பெரும்பான்மையினரை நாடியவர்கள். இவர்களின் எண்ணம், சுயநல காரியங்களுக்காக பெரும்பான்மையினத் தலைவர்கள் முன் கைகட்டி நின்று அவர்களிடம் இருந்து சலுகைகளைப் பெற்று தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் விருத்தியடையச் செய்வதே. அவர்களுக்கு வருங்காலம் பற்றியும் தமிழ் மக்களின், தமிழ் மொழியின், தமிழ்ப் பாரம்பரியத்தின் எதிர்காலம் பற்றியும் எந்தவித கரிசனையும் இல்லை.
‘இன்று நாம் சுகித்து வாழ்வோம் நாளை பற்றி நமக்கென்ன கவலை’ என்ற மனோநிலையில் எவர் முன்னும் பல்லிளிக்கவும் அவர்கள் தருவதைக் கையேற்கவும், அவர்கள் முன் அவர்கள் சொற்படி நடக்கவும் ஆயத்தமாக நிற்கின்றார்கள். அதற்காக எமது தமிழ் அலுவலர்களைப் பகைக்கவும் அவர்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள். அவர்களின் இந்த மனோநிலையை சிங்களத் தலைவர்கள் நன்றாக அறிவார்கள். அதனால் அவர்களைக் கொண்டே எம்மவரை அழிக்க திட்டம் போட்டுக் கொண்டு நிற்கின்றார்கள். அதையறியாமல் எமது தமிழ்ப் பேசும் தலைவர்கள் சிலர் கையாட்களாக, அடிவருடிகளாக, ஏவல்காரர்களாக நடந்து ஒத்துழைப்பை மத்திய அரசாங்கத்திற்கு நல்கி வருகின்றார்கள்.
இந்த நிலையில் நாம் நிலைமையைக் கிரகித்து ஒற்றுமையுடன் அரசியலில் அடியெடுத்து வைக்கும் கட்டத்தை அண்டியுள்ளோம்.
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – ஒற்றுமையின்றேல் அனைவர்க்குந் தாழ்வே’ என்பது தமிழர்களின் முதுமொழி. அதனைத் தமிழர்களே மறந்து வாழலாமா? நான் அண்மையில் எங்கோ கூறியது போல் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளான தமிழரசுக் கட்சி, TELO, PLOTE, TNPF, EPRLF, TNP, சுயாட்சிக் கழகம் மற்றும் எமது தமிழ் மக்கள் கூட்டணி என்பவற்றின் அரசியல் குறிக்கோள் சமஸ்டிடியே. அதில் அவர்கள் ஒற்றுமைப்பட்டே நிற்கின்றனர்.
ஒரு வேளை எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சற்று முன்னேறி கூட்டு சமஷ;டியை (Confederation) வலியுறுத்தி நிற்கின்றோம் என்று கூறலாம். ஆனால் அடிப்படையில் நாம் வேண்டுவது சமஸ்டியையே. தமிழ்க் காங்கிரசின் யாப்பு எப்படி இருப்பினும் அவர்களின் தற்போதைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுவது சமஷ;டியையே. பின் ஏன் எங்களுள் பிரிவினை?
நான் ஏற்கனவே கூறினேன் ‘குறை கூறமுடியாத ஒருவர் மனிதர்களுள் இருக்க முடியாது’ என்று. அவதார புருஷர்கள் கூட குற்றவாளிகளாக இனங்காணப்பட்டார்கள் அவர்கள் காலத்தில்.
அடுத்தது ஒரு பிரச்சனை எழுந்த காலத்தில் இருந்த சூழலை வைத்து அந்தப் பிரச்சனைக்குத் தற்போது அதே வழியில் தீர்வைப் பெறமுடியாது என்று ஐன்ஸ்டைன் கூறியதையும் நினைவுப்படுத்தினேன். அவர் கூறினார் ‘“The world will not evolve past its current state of crisis by using the same thinking that created the situation” இன்றிருக்கும் பிரச்சனையைத் தீர்க்க பிரச்சனை ஏற்பட்ட காலத்தில் இருந்த சிந்தனையை வைத்து தீர்வு காணமுடியாது. அன்று போர் நடந்து கொண்டிருந்தது இன்று அப்படியல்ல.
ஆயுதமேந்திய அனைவரும் மனிதர்களே. ஆகவே அவர்களில் சிலர் குற்றமிழைக்கவில்லை. மற்றவர்கள் தான் குற்றம் இழைத்தார்கள் என்று கூறுவதில் பயனில்லை. அன்று அவ்வாறு நடந்து கொண்டவர்கள் இன்றும் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்று கூறுவது இன்றைய சூழலையும் அன்றைய சூழலையும் புரிந்து கொள்ளாது பேசும் பேச்சாகும்.
ஆனால் மனிதர்களின் பிறப்புக் குணாதிசயங்கள் சில அவர்களை என்றென்றும் பீடித்திருக்கக்கூடும். அவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டே பலரின் நன்மைக்காக, ஒரு இனத்தின் நன்மைக்காக, அந்த இனத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நன்மைக்காக நாங்கள் ஒற்றுமைப்பட்டு முன்னேறுவது நன்மையே தரும்.
சிலருக்கு அது தமது தலைமைத்துவத்தின் கீழ் மட்டுந்தான் நடைபெற வேண்டும் என்ற சுயநல சிந்தை இருக்க முடியும். ஆனால் அவர்களின் தலைமைத்துவம் சித்தி அடையும் வரையில் எம்மைப் பாதிக்கும் சூழல் காத்திருக்குமா என்பது தான் கேள்வி. மக்களின் ஒற்றுமையை நாம் உருவாக்கி எம் இனத்திற்கான தீர்வைப் பெற்றுவிட்டு தலைமைத்துவப் போட்டியில் இறங்கலாமே!
நாம் எம்முள் போட்டி போடுவது எமது எதிரிகளுக்குத்தான் நன்மையைத் தரும் என்பதை நாம் மறக்கக்கூடாது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசியம் பேசும் அனைத்துக் கட்சிகளினதும் ஒற்றுமையானது அந்தந்தக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறந்த தலைவர்களாகவே கணிக்க வைக்கும். அதை நாம் மறந்துவிடலாகாது.
இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் எமது முன்னோர்கள், நாம், பிரித்தானியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் விட்ட தவறுகளைத் தொடர்ந்து பேசுவதில் பயனில்லை. ஐ.நா சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் போன்றன விட்ட தவறுகளைப் பேசிப் பயனில்லை.
இன்று, எமது அகிம்சைப் போராட்டங்களுக்குப் பின்னர், ஆயுதப் போராட்டங்களுக்குப் பின்னர் ஒரு ஆபத்தான கால கட்டத்தை எட்டியுள்ளோம். காணிகள் பறிபோகின்றன. சிங்களமொழியின் பிரயோகம் வடக்கு கிழக்கில் அரசாங்கத்தால் மும்முரமாகத் திணிக்கப்பட்டு வருகின்றது. கலாச்சார, வரலாற்று அழிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. எமது நல்ல கல்லூரிகள் மாகாணத்திடம் இருந்து மத்திக்கு தேசியப் பாடசாலைகள் என்ற போர்வையில் கையேற்கப்பட்டு வருகின்றன. இராணுவம் தம்மைப் பலமாக இங்கு நிலை நிறுத்தியுள்ளார்கள். தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் வெகுவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் யாவரும் ஒன்றிணைந்து கடமையாற்றுவது வெறும் உசிதம் அல்ல உச்ச கட்ட யுக்தியாகும்.
இதனை உணர்ந்து தான் அண்மையில் 6 கட்சிகள் சேர்ந்து மோடிக்குக் கடிதம் அனுப்பினோம். ஐந்து கட்சிகள் சேர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பினோம். ஆணையாளரின் உயர் மட்ட அலுவலர்களுடன் Zoomஅல் பேசினோம்.
இன்று வெள்ளம் தலைக்கேறிவிட்டது. ஒற்றுமையின்றேல் அனைவர்க்குந் தாழ்வே என்ற கட்டத்தை நாம் அனைவரும் அடைந்துள்ளோம். பெரும்பான்மையினக் கட்சிகளுடன் சேர்ந்திருப்போருக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் சுயநலம் அவர்கள் கண்களை மூடியிருக்கும். ஆனால் தமிழ்த் தேசியம் பேசுவோருக்கு அது புரிந்திருக்கும்.
தமிழ்த் தேசியம் பேசுவோரில் தமிழ் மீதும் தமிழர் மீதும் கூடிய அக்கறை கொண்டவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணப்புகின் தமிழ் மக்களே பாதிக்கப்படுவார்கள். தமிழ் மக்களின் முன்னேற்றமும், பாதுகாப்பும், வாழ்வியல், பொருளாதார அபிவிருத்திகளும், எமது பாரம்பரிய பூமியில் வருங்கால தமிழின நிலையான இருப்பும் முக்கியமாகக் கருதப்படவேண்டும். முன்னைய தமிழ்த் தலைவர்;கள் கருத்தொருமித்தலால் வழக்குகளை வென்றார்கள். ஆனால் உண்மையான ஒற்றுமையை அரும்ப வைக்க அவர்களால் முடியவில்லை.
இன்றைய தமிழ்த் தலைவர்கள் கருத்தொருமித்தலால் ஒன்று சேர்ந்து வடகிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பெற வேண்டும். சர்வதேச நிலைமைகள் பூகோள அரசியற் சூழல் ஆகியன சாதகமாக வந்து கொண்டிருக்கும் இவ் வேளையில் நாம் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளியாமல் எமது மக்களின் வருங்காலம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
தேர்தலின் போதான கட்சிகளின் சுயலாப நோக்கங்கள், கட்சித் தலைவர்களின் சுயநல ஏக்கங்கள் போன்றன தனிப்பட்ட விரோத மனப்பாங்குகள, பேதங்கள், ஈகோ அல்லது அகந்தை நிறை சிந்தனைகள் ஆகியவற்றைத் தாண்டி நாம் ஒற்றுமை காப்பது அவசியம். தமிழரின் விடியலுக்காக திறந்த மனதுடன் கலந்துறவாடி ஒரு ஒற்றுமை ஒன்றியத்தை உருவாக்குவது அவசியம். அதன் பின்னர் அரசாங்கத்துடனும் சர்வதேசத்துடனும் பேசுவோம். நிலத்திலும், புலத்திலும், தமிழகத்திலும் உள்ள தமிழுறவுகள் இவ்வாறான ஒற்றுமைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து ஒரு சமஷ;டி அரசியல் யாப்பை இலங்கையில் உருவாக்கப் பாடுபடுவோம்.
அதன் பின் வரும் சமஷ;டி அரசை யார் வழி நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் கட்சிகள் ரீதியாக போட்டிகளில் ஈடுபடலாம். இன்றைய சூழலைப் புரிந்து கொண்டு காய் நகர்த்துவதே தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களின் இன்றைய தலையாய கடப்பாடாகும்.





