
வலுசக்தி அமைச்சரை அந்தப் பதவியிலிருந்து நீக்கி, மூன்று நாட்கள் கடந்துள்ள போதிலும் எரிபொருள் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
வரலாற்றில் என்றுமில்லாத துன்பத்தை நமது நாட்டு மக்கள் தற்போது எதிர்கொள்கின்றனர். நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர், எமது நாட்டின் தலைவர்களுக்கு நாடு ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் வரிசையில் நிற்கும் யுகமொன்று தற்போது உருவாகியுள்ளது.
நாட்டின் பிரஜைகளுக்கு பாரிய கடன் சுமையை இந்த அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக பொய்களை கூறி பிரச்சினைகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் இரண்டு, மூன்று தினங்கள் நீண்டவரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்று செல்கின்றனர்.
இது நாட்டு மக்களின் துன்பம் மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்துக்கும் மரண அடியாகவே காணப்படுகின்றது.
விவசாயிகளுக்கு தங்களது உற்பத்திகளை விற்பனை செய்துகொள்வதற்கு டீசல் இல்லை. அதேபோன்று மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கு எரிபொருள் இல்லை.
ஏற்றுமதித் துறைகள், சுற்றுலாத் துறைகள் உள்ளிட்ட பொருளாதாரத்துக்கு தேவையான அனைத்துத் துறைகளும் எரிபொருளின்றி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த துறைகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அசமந்தடைந்துள்ளது.
மூன்று, நான்கு நாட்களுக்கு எரிபொருள் இருப்பதாக முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியதன் காரணமாகவே நாட்டில் எரிபொருள் வரிசை உருவானதாக பிரதமர் கூறுகின்றார்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வை பெறுவதற்கு முயற்சிக்கவில்லையா என்றே நாம் அரசாங்கத்தை கேட்கின்றோம்.
இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டவுடன், இறுதியில் துறைசார்ந்த அமைச்சரை நீக்கிவிட்டு அந்த அமைச்சர்மீது அனைத்து விடயங்களையும் திணித்துவிட்டு அரசாங்கம் தப்பிவிடுகின்றது.
வலுசக்தி அமைச்சராக கடமையாற்றிவரை அமைச்சுப் பதவிவிலிருந்து நீக்கி நான்கு நாட்கள் கடந்துள்ள போதிலும் நாட்டில் எரிபொருள் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.- என்றார்.





