சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று மாலை 4 மணிக்கு சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அனைவரும் உழைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்தார்.

இது பிரிந்து செல்வதற்கோ அல்லது அரசாங்கத்தை அமைப்பதற்கோ ஒரு காலகட்டம் அல்ல என்று அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்களித்து உருவாக்கிய அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக எப்போதும் செயற்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், அரசாங்கத்துடன் இணைந்துள்ள சகல தரப்பினருக்கும் அரசியலில் ஈடுபடுவதற்கு உரிமை உண்டு என தெரிவித்ததுடன், ஒரு கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 15 பிரேரணைகள் கொண்ட அறிக்கை வடிவில் பல கருத்துக்களை முன்வைத்துள்ளது என்றார்.

அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அயராது உழைத்ததுடன், அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கும், வாக்குறுதியளிக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் உழைக்கும் என்றும் திஸாநாயக்க கூறினார்.

Leave a Reply