பெண் என்ற பிறப்பு கொடுத்த திமிர் எனக்கு உண்டு! – பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்

பெண் என்பவள் எல்லா ஆற்றலோடும் எல்லாத் திறமையோடும் இயற்கையான அறிவோடும் செயற்திறன் மிக்க ஒருத்தியாகத்தான் இந்தப் புவிக்கு வருகின்றாள் என பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சியும் இடம்பெற்றது.

அத்தோடு இன்றைய மகளிர் தின நிகழ்வில் பிரதேச செயலக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட சில சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான கௌரவமும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் மேலும் தெரிவிக்கையில்:

சேலையை வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்ய வேண்டியவர்கள் பெண்கள். ஆடை பாதி ஆள் பாதி என்று கூறுவார்கள். பெண் என்ற பிறப்பு கொடுத்த திமிர் எனக்கு உண்டு.

குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்து விட்டால் சீதனம் கொடுக்க வேண்டும் என்று வருந்தும் காலம் இது. ஆனால் பெண் குழந்தை பிறந்து விட்டால் எமது பாரம்பரிய பண்பாடுகளை, வல்லமைகளை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வந்திருக்கிறாள் என மகிழ்ச்சியுறும் காலமும் இருந்தது.

அந்த வகையிலே பெண் குழந்தை தாயிற்கு அடுத்தபடியாகக் குடும்பத்தை நிர்வகிக்கும் போது வீடு சீராகிறது. வீடு சீராக இருந்தால் ஊர் சீராகிறது. ஊர் சீராக இருந்தால் நாடு திருந்தும்.

பல பிறநாட்டுப் பண்பாடுகள் எங்களுக்குள் வந்து புகுந்தபோது தான் அடிப்படையான மகிழ்வாக இருந்த எமது பெண்களின் வாழ்வு மாற்றம் பெற்றது.

குறிப்பாக சொல்லப்போனால் சர்வதேச மகளிர் தினம் என்ற கொண்டாட்டம் எப்போது ஆரம்பித்தது. அதற்கு முன் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்களா? அதற்கு முன் அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லையா? அல்லது பொறுப்பு கொடுக்கப்படவில்லையா? கொஞ்சம் முற்காலத்திற்கு போய்ப் பார்த்தால் ஒரு சிறப்பான தகுதியை எங்களுக்கு சமூகம் வழங்கியிருந்தது.

அதுதான் இல்லாள். இல்லத்தை ஆள்பவள். உணவைச் சமைக்கும் போது சுவைத்துப் பார்க்கிறாள். தான் சமைத்த உணவில் நஞ்சுபதார்த்தம் இருக்கிறதா? என்ற கோணத்தில் சுவைத்துப்பார்ப்பாளாம். அந்த இடத்தில் அவள் மருத்துவராகச் செயற்படுகின்றாள்.- என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply