மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, போக்குவரத்து, வீதிகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் (UNFPA) மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை இணைந்து, “பாதுகாப்பான பயணம் – பாதுகாப்பான சமூகம்” என்ற தொனிப்பொருளில் தேசிய மட்டத்தில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்றைய தினம் முன்னெடுத்திருந்தன.
வன்முறையற்ற பொதுப் போக்குவரத்து சேவையை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
பத்தரமுல்ல சுஹுருபாயா வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், போக்குவரத்து, வீதிகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடா, ஐ.நா. அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மையான இலக்காகும். போக்குவரத்து சேவையின் தரத்தை உறுதி செய்து, மக்களுக்கு நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய சேவையாக மாற்றுவதே எங்களது குறிக்கோள்” எனவும் தெரிவித்திருந்தார்.