கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாடசாலைகளை மூடுவதற்கு முற்பட வேண்டாம்! – எச்சரிக்கும் முன்னாள் எம்.பி.

 

கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

10 மாதங்களில் எவ்வாறு கல்வி மறுசீரமைப்பினை முன்னெடுப்பார்கள்? 20 ஆண்டுகளாக கல்வி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பினை வெளியிட்ட இவர்கள், எமது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே தற்போது நடைமுறைப்படுத்துகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது இவர்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பல்கலைகழக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அவற்றுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் கடந்த காலங்களில் நாட்டுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியவர்களாவர்.

ஆனால் இன்று அவர்கள் எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர். 

பாடசாலைகளை மூடுவது தொடர்பிலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எமது ஆட்சி காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை.

எனவே இந்த அரசாங்கமும் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *