வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படும் – அமைச்சர் வசந்த களவிஜயம்

 

வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாதம் திறப்பதற்கு தமது அமைச்சால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிப கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.

வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்தியநிலையத்தை வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பார்வையிட்டிருந்தார். 

கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முதலிட்டு அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமல் உள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

பலமில்லியன் ரூபாய் பணம் இந்த பொருளாதார மத்தியநிலையத்தில் செலவிடப்பட்டுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய திருத்தப்பணிகளை செய்துவிட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 

அத்துடன் ஏற்கனவே வவுனியா மொத்தவியாபார சந்தையில் உள்ள 35 வியாபாரிகளுக்கு மத்திய நிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன் மன்னாரில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. எனவே அந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். 

அந்த திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளனவா என்பது தொடர்பாக ஆராயவேண்டும். 

அபிவிருத்தி பணிகளையும் மக்களுக்கு செய்யவேண்டிய தேவை உள்ளது. 

நாட்டில் மின்சாரம் தொடர்பாக பல பிரச்சனைகள் உள்ளது. அதனை நிவர்த்திசெய்யவேண்டும். 

எனவே மக்களின் எதிர்ப்பினையும் கருத்தில் எடுத்து அந்த திட்டம் தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *