
கிளிநொச்சி, மார்ச் 12
கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் வரும் மார்ச் 16 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 4 ஆவது மாவட்டத்தில் மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணம், வவுனியா மேல் நீதிமன்றங்கள் மாகாண நீதிமன்றங்களாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் மன்னார் மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்றங்கள் குற்றவியல் வழக்குகளை விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளன.
கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாக ஏ.எம்.எம். சகாப்தீன் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அரச சட்டவாதி கலீமா பாயிஸ் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி நீதிமன்ற அரச சட்டவாதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மேல் நீதிமன்றப் பதிவாளராக எஸ்.சிறிகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உத்தியோகத்தர்களின் நியமனங்களையும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு நியமித்துள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதனால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விளக்கம் நடைபெறாமல் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் கிளிநொச்சி மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.




