
கச்சதீவு, மார்ச் 12
கச்சத்தீவில் இலங்கை- இந்திய மீனவர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில், 100 இந்திய தமிழ்நாட்டு மீனவர்களும், 100 இலங்கை வடமாகாண தமிழ் மீனவர்களும் மட்டுமே கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று,இன்று 12 கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெற்று வருகின்றது. டக்ளஸ் தேவானந்தா கச்சதீவுக்கு சென்று இரு நாட்டு மீனவர்கள் மத்தியிலும் உள்ள பிணக்கைத் தீர்க்க, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதுபோலவே இந்தியத் தரப்பிலிருந்து சென்ற விசைப்படகு மீனவர் தலைவர்களும், நாட்டுப்படகு மீனவர் தலைவர்களும் இலங்கை சார்பாக, வட மாகாண மீனவர்கள், குறிப்பாக, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டினர்.
இது தொடர்பில் டக்ளஸ் அங்கு கூறுகையில்,
நான் இரு நாட்டு மீனவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறேன். ஆகவே நான் யார் சார்பாகவும் கருத்துச் சொல்ல மாட்டேன். நான் நடுநிலையாகத்தான் இருப்பேன். இரு நாட்டு மீனவர்களும், தங்கள், தங்கள் தரப்பு கருத்துக்களைக் கூறுங்கள் என்றார்.
இந்தியாவின் விசைப்படகு மீனவர்களும், நாட்டுப் படகு மீனவர்களும், தங்களால் இலங்கை கடல்பகுதிக்கு பாதிப்பு வராது என்றும் ஆகவே “எங்களை மீன்பிடிக்க அனுமதியுங்கள்” என்றும் கேட்டார்கள்.
அதற்கு இலங்கை மீனவர்கள் மாற்றுக் கருத்துக் கூறினார்கள். இந்திய விசைப்படகுகள், “இழுவலையுடன் வருகின்றன. ஆகவே விசைப் படகுகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது” என வாதிட்டனர். அதே சமயம், நாட்டுப்படகு மீனவர்களால், இலங்கை கடற்பகுதிக்கு பாதிப்பு கிடையாது. ஆகவே நாட்டுப் படகுகளை அனுமதிக்கலாம் என்றும் கூறினார்கள். இந்திய நாட்டுப் படகுகளை, இலங்கைக் கடற்பகுதிக்குள் அனுமதிக்கின்ற அத்தகைய கருத்துக்களை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இலங்கை வட மாகாண மீனவர்கள் கூறியது குறிப்பிடத்தக்க நல்ல அறிகுறி.
மேலும் இலங்கை மீனவர்கள், “எங்கள் அமைச்சர் டக்ளஸ் வழக்கமாகக் கூறுவது போல, மீன்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. ஆகவே அவை இலங்கை கடற்கரையில் உற்பத்தியானாலும், இந்தியக் கடற்கரைக்கு போகத்தான் செய்யும். நீங்கள் இழுவலை மூலம், இலங்கை கடற்கரையோரத்தில் உள்ள மீன்களை அழித்துவிட்டால், இரண்டு நாட்டுக் கடலும் காலியாகி விடும். அது இரண்டு நாட்டிற்குமே நட்டம்” என்று வாதிட்டார்கள்.
அவர்களது வாதம் “இந்திய விசைப்படகுகளில் உள்ள இழுவலை ( Trawllor) மட்டுமே பிரச்சினை” என்பதாகத் தெரிகிறது. இரு தரப்புக் கருத்துக்களையும் கேட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ், “நீங்கள் இருதரப்பும் கூறிய வாதங்களை நான் கேட்டேன். இது தீர்ப்பு கூறும் கூட்டமல்ல. ஆனாலும் இரு தரப்பு மீனவர்களும் பேசுவதற்கான முதல் தொடக்க கூட்டம். நீங்கள் கூறிய கருத்துக்களை, நான் இந்த மாதம் இறுதியில் கூடும் இலங்கை அமைச்சரவை முன்பு எடுத்துச் சொல்வேன். இலங்கை அமைச்சரவைதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய மீனவர்களை அனுமதிக்க, இந்திய நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு என்னிடம் பேசினார். நான் ஒப்புக் கொண்டேன்.நான் தமிழ்நாடு முதல்வரிடம் பேச ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். அவரும் சம்மதித்தார். ஆனால் இதுவரை ஏற்பாடு செய்யவில்லை. அதையும் தமிழ்நாடு அரசாங்கத்திற்குத் தெரிவியுங்கள்” என்றார்.
உடனே இந்திய விசைப் படகு மீனவர்கள், இலங்கையில் பிடிபட்டுள்ள தங்கள் படகுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கேட்டனர். அதற்கு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “அது வழக்காக கோர்ட்டில் நிற்கிறது. அதில் சட்டப் பிரச்னை இருக்கிறது. அதில் தீர்ப்பு வந்தால் பரிசீலிக்கலாம்” என்றார். மேற்கண்ட நிகழ்வுகளுக்குப் பிறகு, எப்படியோ இருநாட்டு மீனவர்களும், அமர்ந்து பேசுவதற்கு அந்தோணியார் கோயில் திருவிழா பயனுள்ளதாக அமைந்தது எனக் கருதினோம்.
டக்ளஸ் தேவானந்தா “இந்த முறை இரு நாடுகளிலிருந்தும், 100-100 மீனவர்கள்தான் கச்சத்தீவு திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அடுத்த ஆண்டு, இரு நாடுகளிலிருந்தும், ஆயிரம்-ஆயிரம் மீனவர்கள் அனுமதிக்கப்பட ஏற்பாடு செய்கிறேன் “ என கூறினார்.




