யாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் பணமும், நகைகளும் திருடப்பட்ட நிலையில், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூரில் உள்ள வீடொன்று, இரவுவேளையில் உடைக்கப்பட்டு பெருந்தொகை வெளிநாட்டுப் பணமும், நகையும் அண்மையில் திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி கலும்பண்டார தலமையிலான குழுவினர், நேற்றைய தினம் பிரதான சந்தேகநபரைக் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து பெருமளவு நகைகளையும், வெளிநாட்டு நாணயங்களையும் மீட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




