கீழ்த்தரமான முறையில் செயற்படும் பொலிஸார்; எம்மை அச்சுறுத்த முடியாது! விமல் வீரவன்ச கடும் சாடல்

இலங்கையில் உள்ளது ஸ்ரீலங்கா பொலிஸா அல்லது மக்கள் விடுதலையின் பொலிஸா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்து பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் விடயங்களை ஊடகங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பகிரங்கப்படுத்தியுள்ளமை இதுவே முதன்முறையாகும்.

தண்டனைச் சட்டக்கோவையின் 110(3) பிரகாரம் ஏதேனும் வாக்குமூலம் குறித்து பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலத்தின் இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொலிஸ் கடந்த காலங்களில் இவ்வாறு செயற்பட்டதில்லை. 

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொலிஸ் சேவையை பொலிஸ்மா அதிபர் அரசியல்மயப்படுத்தியுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் தங்காலை பொலிஸார் என்னை அழைத்து வாக்குமூலம் பெற வேண்டிய அவசியம் கிடையாது.

அந்த நபருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பையே வெளிப்படுத்தினேன். ஊடகங்களுக்கு அதனையே வெளியிட்டேன்.

ஸ்ரீ லங்கா பொலிஸ் மிக கீழ்த்தரமான முறையில் செயற்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைகளின் பிரதானியாகவே  பொலிஸ்மா அதிபர் செயற்படுகிறார். 

அரசாங்கத்தின்  முறைகேடான செயற்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்துவேன். பொலிஸாரை கொண்டு எம்மை அச்சுறுத்த முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *