
உக்ரைன், மார்ச் 14
உக்ரைன் இராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் சாய் நிகேஷ், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் நிகேஷ் (21) உக்ரைன் இராணுவத்தின், ‘ஜார்ஜியன் நேஷனல் லிஜியன்’ என்ற துணை படையில் இணைந்தார்.
பெற்றோர் தங்களது உடல்நிலைக் காரணங்களை கூறி, கண்டிப்பாக திரும்பி வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதால், சாய் நிகேஷ் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக கோவையில் உள்ள அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
சாய் நிகேஷ் குறித்த இத்தகவல் உளவுத் துறை அதிகாரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாய் நிகேஷின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்தபோது, ”மகனை மீட்டுத் தர அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மகன் நல்லபடியாக வர வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். மற்ற விஷயங்கள் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை” என்றார்.


