இலங்கையின் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்கு அருகாமையில் பயணித்துக்கொண்டிருந்த சீனக் கொடியையுடைய கப்பல் ஒன்றின் பணியாளர் ஒருவரை, அவசர மருத்துவச் சிகிச்சைக்காக இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாகக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (27) , இலங்கையிலிருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த கப்பலில் இருந்த பணியாளர் ஒருவருக்குக் கடும் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.
தகவல் கிடைத்தவுடன் செயற்பட்ட கடற்படையினர், குறித்த கப்பலை காலி கடற்பரப்பின் எல்லைக்கு வருமாறு அறிவுறுத்தியதுடன், அதுவரை நோயாளிக்கு வழங்க வேண்டிய முதலுதவி ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
தெற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான விசேட படகு ஒன்று காலி கடற்பரப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, நோயாளி பாதுகாப்பாகப் பொறுப்பேற்கப்பட்டார்.
வியாழக்கிழமை காலை கரைக்குக் கொண்டு வரப்பட்ட குறித்த பணியாளர், மேலதிக சிகிச்சைகளுக்காக காலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கப்பல் சீன ஆராய்ச்சி கப்பலான ‘ஷி யான் 6’ எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கப்பல் கடந்த 2023 ஆம் ஆண்டிலும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்ட பணியாளரே இவ்வாறு காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.




