பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தில் வெலிகந்த சுசிரிகம பிரதேசத்தில் சொகுசு பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
சுசிரிகம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையும், காலி பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவான செலுத்துகை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுகொட வீதியின் 3ஆம் மைல்கல் தூணிற்கு அருகில் நேற்று சனிக்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டுகொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, சீதுவை விஜய குமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் மீகொடை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





