வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுக விழா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (01) கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது.
கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை, அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, அதிகாரசபையின் தற்போதைய செயல்பாடுகளைப் பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார்.
இதன் முக்கிய நிகழ்வாக, வடமாகாண தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்த புதிய சீருடையில், பயணிகள் ஏதேனும் புகார்களைத் தெரிவிப்பதற்காக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கம் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிமுக விழாவில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், அதிகாரிகள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இப்புதிய சீருடை நடைமுறையானது வடமாகாணத்தின் பொதுப்போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய ஒழுங்குமுறையை ஏற்படுத்தும் எனப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.








