மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து 30 இலட்சம் ரூபா நகைகள் மாயம் – நடந்தது என்ன?

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், திருடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, செபஸ்தியார் வீதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் கடந்த 14ஆம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் மதில் மீது ஏறிக் குதித்து உள்ளே நுழைந்த சந்தேகநபர், வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு, சங்கிலி உள்ளிட்ட 8 பவுண் தங்க ஆபரணங்களையும், போலி ஆபரணங்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் விற்பனை செய்யப்பட்டிருந்த நகைகளும், வேறு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, மோதிரம், பெண்டன்ட், தோடு உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply