கனமழையால் நீரில் மூழ்கிய தாழ்நிலப் பகுதிகள்! 22 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஸ்நாகொட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக நீர் திறந்துவிடப்படத் தொடங்கியுள்ளதால், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அப்பகுதிகளிலுள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் பாதுகாப்புடன் பயணிக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

இதேவேளை  திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தம்பலகாமம், கிண்ணியா, மூதூர் மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, பெரும்போக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை விவசாய நடவடிக்கைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

  

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (09) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (10) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, கேகாலை, கிளிநொச்சி, குருணாகல், மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா, பொலன்னறுவை, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று ஆகிய பகுதிகளுக்கும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, கட்டுவன, லுணுகம்வெஹெர, ஓகேவெல, சூரியவெவ, தங்காலை மற்றும் வீரகெட்டிய ஆகிய பிரதேசங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply