GovPay என்ற பெயரில் வரும் போலி குறுஞ்செய்திகள் (SMS/iMessage) தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை பொலிஸின் போக்குவரத்து பிரிவினால் வேகக் கட்டுப்பாட்டை மீறியமைக்கான அபராதத் தொகையை செலுத்துமாறு கோரி மக்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் (SMS / iMessage) மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ‘GovPay’ இணைய இணைப்பு (Link) முற்றிலும் பொய்யான, போலி மற்றும் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சைபர் மோசடியாகும்.
இவ்வாறான எந்தவொரு அபராதத்தையும் செலுத்துவதற்காக ‘GovPay’ உத்தியோகபூர்வ தளத்தின் ஊடாக இத்தகைய குறுஞ்செய்திகளையோ அல்லது அறிவித்தல்களையோ அனுப்புவதற்கு அமைச்சோ அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனமோ நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறான வெளிநாட்டு அல்லது சந்தேகத்திற்கிடமான இணையதள இணைப்புகள் (குறிப்பாக lygov.art போன்ற போலி டொமைன்கள்) மூலம் எவ்வித அபராதத் தொகையும் அறவிடப்படுவதில்லை.
இந்த மோசடி குறுஞ்செய்திகள் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை நுட்பமாகப் பெற முயற்சிப்பதால், இத்தகைய குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதையோ அல்லது அவற்றில் உள்ள இணைய இணைப்புகளை (Links) திறப்பதையோ முற்றிலும் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் – என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.




