இன்று முதல் முடங்கப் போகும் பல அரச சேவைகள் – தொழிற்சங்கங்களின் அடுத்த அதிரடி நகர்வு

2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தங்களது தொழில்சார் கோரிக்கைகள் மற்றும் களப் பணி கொடுப்பனவுகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு அரச சேவைதொழிற்சங்கங்கள் இன்று (16) முதல் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.

களப் பணிகள் மற்றும் எரிபொருளுக்காகத் தங்களது சொந்தப் பணத்தைச் செலவிட வேண்டியுள்ளதாகக் குற்றம் சாட்டி, நாடளாவிய ரீதியிலுள்ள 450-க்கும் மேற்பட்ட நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உதவியாளர்கள் நள்ளிரவு முதல் 2 நாட்களுக்குச் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் சமன் துஷார வைத்திய ரத்ன எச்சரித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரால் உறுதியளிக்கப்பட்ட நான்கு பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையாலும், பாதீட்டில் புறக்கணிக்கப்பட்டமையாலும் அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கத்தினர் இன்று காலை முதல் அனைத்து நிவாரணப் பணிகளிலிருந்தும் விலகித் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் குமார தெரிவித்துள்ளார்.

2024 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள களப் பணி கொடுப்பனவை மீள வழங்குமாறு கோரி, அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு  அருகில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

இது சம்பள உயர்வு கோரும் போராட்டம் அல்ல, களப் பணிச் செலவுகளை ஈடுகட்டவே என அச்சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply