மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி; நீதிமன்றத்தில் விலையுயர்ந்த வாழ்நாள் பாடம்

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யுமாறு கொழும்பு புதுக்கடை இலக்கம் 07 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி இலக்கம் 05 வழித்தடத்தில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தை, நேற்று (19) காலை சங்கராஜ மாவத்தையில் வைத்து மருதானை பொலிஸ்  போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸாரின் சமிக்ஞையைப் பொருட்படுத்தாமல் பேருந்தை தொடர்ந்து செலுத்திச் சென்ற சாரதியை, அதிகாரிகள் துரத்திச் சென்று நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, சாரதி மது போதையில் இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர் புதுக்கடை இலக்கம் 07 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தண்டனைக்கு உள்ளான சாரதி 58 வயதுடைய நாரம்மல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply