யாழில் 37 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக முகாமைத்துவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 37 உத்தியோகத்தர்கள், 10 நாள் ஆளுமை விருத்திப் பயிற்சியை நிறைவு செய்த நிலையில், அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (20.11.2026) நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார். நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் தலைமையில் நடைபெற்றது.

கடந்த நவம்பர் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற இப்பயிற்சியில், ஸ்தாபன விதிக்கோவை, அலுவலக நடைமுறைகள், நிதி நடைமுறைகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினித் தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் கற்பிக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய அரசாங்க அதிபர், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு அரச உத்தியோகத்தர்களிடம் அறிவு, திறமை, பொறுப்புணர்வு மற்றும் சரியான மனப்பாங்கு அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும், பயிற்சியில் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் அரச சேவைக் காலம் முழுவதும் நடைமுறைப்படுத்தி, நேர்மையானதும் பொறுப்பானதுமான உத்தியோகத்தர்களாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply