இந்த மாத இறுதிக்குள் இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், பணவீக்க அதிகரிப்பு தொடர்பான எதிர்வுகூறலை முன்வைத்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் ஏழாவது மீளாய்வின் கீழ், சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில், ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்து, 9 சதவீதமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் பணவீக்கம் மேலும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பணவீக்க எதிர்பார்ப்புகள் இலக்கை விட்டு விலகிச் செல்லும் அபாயத்தைக் கட்டுப்படுத்த நாணயக் கொள்கையை மேலும் இறுக்கமாக்குவது அவசியம் என நாணயக் கொள்கைச் சபை கருதியுள்ளது.



