யுத்தங்களுக்கும் இராணுவச் செலவினங்களுக்கும் ஒதுக்கப்படும் வளங்களைக் குறைத்து, அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் மனித முன்னேற்றத்துக்காகச் செலவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Inter Pares அமைப்பு ஏற்பாடு செய்த ‘அனைவருக்காகவும் செயற்படும் நாடாளுமன்றத்தை உருவாக்குதல் – பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சர்வதேச பயிலரங்கு’ நேற்று வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை சனத்தொகையில் ஏறக்குறைய 51–52 வீதமானோர் பெண்களாகக் காணப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் 9.8 வீதமாகவும், தொழிலாளர் படையில் 33–34 வீதமாகவு மாத்திரமே காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் தீர்மானங்களில் சகல இன, மதங்களையும் சேர்ந்த பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கல்வி, தொழில்வாய்ப்பு, தொழில்முயற்சியாண்மை, கட்டுப்படியாகும் நிதி மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகல் அவசியம் என்றார்.
மேலும், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கிராமிய, பெருந்தோட்ட மற்றும் நகர்ப்புறப் பெண்களின் நல்வாழ்வு குறித்து நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குவது வெறும் நலன்புரிக்கு அப்பால் சென்று, அவர்களுக்கான கௌரவம், சமமான உரிமைகள், அணுகல் வசதி மற்றும் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வலுவான நாடாளுமன்றப் பொறிமுறையின் தேவையையும், குறிப்பாக இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வாழ்வாதார இழப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் கூடிய வளங்களை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கோவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார வங்குரோத்து நிலை, டித்வா சூறாவளி மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு போர்ச்சூழல் எனக் கடந்த ஏழு ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்ட நெருக்கடிகளை அவர் நினைவுகூர்ந்தார்.
2024ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 42 வீதமானோர் மேல் மாகாணத்தால் ஈட்டப்பட்டதாகவும், எஞ்சிய பங்கையே ஏனைய எட்டு மாகாணங்களும் பகிர்ந்து கொண்டதாகவும் சுட்டிக்காட்டி, நாட்டில் நிலவும் பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைத்தார்.
“மோதலை விட ஒத்துழைப்புக்கும், போரை விட சமாதானத்துக்கும் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், நல்லாட்சிக்கு வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான கொள்கை வகுப்பு அவசியம் என்றார்.
ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச சமூகமும் தமது அர்ப்பணிப்புகளை அர்த்தமுள்ள செயற்பாடுகளாக மாற்றி, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளையும் கௌரவத்தையும் பாதுகாக்க வளங்களைத் திரட்டும் கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ தனது உரையில் கேட்டுக்கொண்டார்.



