"குறுக்குவழி" சொற்பிரயோகம் தொடர்பில் வல்வெட்டித்துறை சபை அமர்வில் கடும் குழப்பம்!

கடந்த சபை அமர்வின்போது கொண்டுவரப்பட்ட பிரேரணையில் பயன்படுத்தப்பட்ட “குறுக்குவழி” என்ற சொற்பிரயோகம் தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபை அமர்வில் கடும் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் 17ஆவது சபை அமர்வு பதில் நகரபிதா நாகதம்பி பத்மநாதன் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அமர்வில், நகர சபைச் செயலாளர் குணபாலசிங்கம் ராஜ்குமார் உள்ளிட்ட சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

கடந்த கூட்ட அறிக்கை ஆராயப்பட்டபோது, கடந்த அமர்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் “குறுக்குவழியில்” என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இந்தச் சொற்பிரயோகம் தொடர்பில் சம்பந்தப்பட்ட உறுப்பினர் விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (தேசிய மக்கள் சக்தி / தமிழ்த் தேசியப் பேரவை) உறுப்பினர் வலியுறுத்தியபோது, சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கையை இரண்டு நிமிடங்கள் ஒத்திவைத்துப் பதில் நகரபிதா வெளியேறினார்.

பின்னர் மீளவும் சபை நடவடிக்கை ஆரம்பித்தபோதும் அமளி தணியாத நிலையில், கடந்த சபை அமர்வின்போது மேற்படி உறுப்பினரது குரல் பதிவு ஒலிபரப்பப்பட்டு விடயம் தெளிவுபடுத்தப்பட்டது.

இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் காரணமாகச் சுமார் 45 நிமிட நேரம் சபையில் கடும் குழப்பம் நிலவியது. அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கை சுமுகமான நிலையில் முன்னெடுக்கப்பட்டு, நிதிக்குழு அறிக்கை ஆராயப்பட்டுச் சபையின் அனுமதிக்குச் சமர்ப்பிக்க வேண்டிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுக் கலந்துரையாடப்பட்டன.

அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமான நகரபிதா எம்.கே. சிவாஜிலிங்கம் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்காக மூன்று மாத சுகவீன விடுப்புக் கோரியிருந்தார். இதன்காரணமாக உப நகரபிதா நா. பத்மநாதன் பதில் நகரபிதாவாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வருகின்றார்.

மருத்துவ விடுப்புக் கோரிக்கை காலம் கடந்தும் நகரபிதா விடயத்தில் தெளிவான தகவல்கள் இல்லாத நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஆளுநரைக் கோரும் பிரேரணை ஒன்று தமிழரசுக் கட்சி உறுப்பினரால் கடந்த சபை அமர்வில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்போது பதில் நகரபிதாவாக உப நகரபிதா கடமைகளை ஆற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளின் ஊடாகக் “குறுக்குவழியில்” பதவியைத் தொடர்வதாகத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் குறிப்பிட்டிருந்தமையே மேற்படி குழப்பத்துக்குக் காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

……………..

Leave a Reply