உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தகைமைகளையும் உலகத் தரத்திலான கல்விச் சேவைகளையும் யாழ்ப்பாணத்துக்கே நேரடியாகக் கொண்டுவருவதன் மூலம், எமது மாணவர்கள் சர்வதேச அரங்கில் போட்டியிடுவதற்குத் தேவையான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான லைசியம் கல்வி குழுமத்தின் (Lyceum Education Group) யாழ்ப்பாணக் கிளையின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (19.11.2026) வியாழக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியிலுள்ள நோர்த் கேற் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், வடக்கு மாகாணத்தின் கல்விப் பரப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக லைசியம் கல்வி நிறுவனத்தின் புதிய கிளை யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. கல்வி என்பது எப்போதும் சமத்துவத்தை ஏற்படுத்தும் மிகச்சிறந்த கருவியாகவும், நம்பிக்கையின் ஒளிவிளக்காகவும், வலிமையான சமூகங்களைக் கட்டியெழுப்பும் அடித்தளமாகவும் விளங்குகின்றது. லைசியம் கல்வி குழுமம் பல ஆண்டுகளாகத் தரமான கற்றல் அனுபவங்களை வழங்கி, மாணவர்களின் முழுமையான ஆற்றலை வெளிக்கொணர்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
சர்வதேசப் பாடசாலைக் கல்வி, உயர்கல்வி, தொழிற்சார் அபிவிருத்தி மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடுகள் வரை லைசியம் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய கிளையானது ஒரு நிறுவனத்தின் விரிவாக்கம் என்பதைத் தாண்டி, மாணவர்களுக்கான வாய்ப்புகளின் பாலமாக அமைகின்றது. இதன்மூலம் எமது மாணவர்கள் உலகளாவிய ரீதியில் போட்டியிடுவதற்கான கருவிகளைப் பெற்றுக்கொள்ளத் தொலைதூரம் செல்ல வேண்டியதில்லை. இம்முயற்சியானது இளையோரின் கல்வி வளர்ச்சிக்கும், ஆளுமை மேம்பாட்டுக்கும், எதிர்கால இலக்குகளை வடிவமைப்பதற்கும் நிச்சயம் துணைநிற்கும்.
இன்றைய வெற்றிக்குப் பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஆற்றும் அர்ப்பணிப்பே அடித்தளமாக உள்ளது. மாணவர்களே, உங்களது சிந்தனைக்குச் சவால் விடுக்கவும், படைப்பாற்றலைத் தூண்டவும், நாளைய தொலைநோக்குத் தலைவர்களாக உங்களை உருவாக்கவுமே இந்நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் புத்தாக்கம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சியின் மையமாக இந்நிறுவனம் மிளிர வேண்டும் என வாழ்த்துவதுடன், எமது சமூகத்தில் முதலீடு செய்துள்ளமைக்காக லைசியம் கல்வி குழுமத்துக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் லைசியம் கல்வித் துறையின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் லைசியம் குளோபல் ஹோல்டிங்ஸின் பிரதம வளர்ச்சி அதிகாரியுமான பிரமிளா பவுல்ராஜ், லைசியம் அசஸ்மென்ட்ஸ் மற்றும் லைசியம் அக்கடமியின் பொது முகாமையாளர் லசந்த கருணாரத்ன, லைசியம் கம்பஸின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் தர உறுதிப்பாட்டுத் தலைவர் சன்கமி டி சில்வா, லைசியம் பிளேஸ்மென்ட்ஸின் பிரதிப் பொது முகாமையாளர் நவோதயா கலுபஹன, விற்பனை மற்றும் நிறுவனக் கூட்டாண்மை முகாமையாளர் அமந்த குணரத்ன, யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர் ஜெயரோஷ;மன் கெதீஸ் உள்ளிட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




