2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (23) அரச சேவையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, நாளை நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு முன்பாக தொடர் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் இணைந்து நாளை தேசிய கறுப்பு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் அமில சந்தருவன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிட்டால், நவம்பர் 30ஆம் திகதியளவில் பாடசாலைக் கட்டமைப்பை முடக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள சுகாதார ஊழியர்களும் நாளைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நவம்பர் 30ஆம் திகதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை அரச ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தொழிலாளர் போராட்ட நிலையமும் ஆதரவளிக்கவுள்ளதாக அதன் செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக எதிர்வரும் இரண்டு வாரங்களில் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாளை அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதுடன், நவம்பர் 30ஆம் திகதி சில துறைகளில் ஒருநாள் வேலைநிறுத்தமும், மேலும் சில துறைகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இதற்கான உரிய தீர்வை வழங்காவிட்டால், இதனைவிடப் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக உழைக்கும் மக்களை அணிதிரட்டத் தயாராக இருப்பதாகவும் துமிந்த நாகமுவ எச்சரித்துள்ளார்.




