வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் வன்னியில் அதிகளவான காணிகளை ஆக்கிரமித்துள்றதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பில் பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போதுள்ள வனப்பகுதியை 16% இலிருந்து 30% ஆக அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, மக்களுக்குச் சொந்தமான உறுதியான காணிகள் அல்லது அவர்கள் முன்னர் பயன்படுத்திய காணிகள் இருக்குமானால், அந்தக் காணிகளை விடுவித்துக் கொடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியுமென பதிலளித்துள்ளார்.
பாராளுமன்றில் 25.11.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்கள் அதிகமான நிலப்பரப்புக்களை அபகரித்து வைத்திருக்கின்றனர்.
குறிப்பாக 5,98000 ஏக்கர் அளவில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய மொத்த நிலப்பரப்புக் காணப்படுகின்றது.
அதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏறத்தாள 4,32000ஏக்கர் நிலப்பரப்பை வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலுள்ளது.
இவ்வாறு வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளுக்குள் மக்களுடைய நெற்செய்கைக் காணிகள், மக்களின் பயன்பாட்டிலுள்ற காணிகள், சிறுதானிய பயிர்ச்செய்கைக்காணிகள் என்பனவும் அடங்குகின்றன. இதனால் அந்த காணிகளுக்குரிய மக்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
எனவே இந்தக் காணிகளை விடுவிப்பதுதொடர்பில் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதன்போது பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இதன்போது பதிலளிக்கையில்,
அதேபோலத்தான், இந்தத் திணைக்களங்கள் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தியுள்ளனவா என்பது வேறொரு விடயம். ஆனால், மக்களுக்குச் சொந்தமான காணிகளை இயன்றவரை விடுவிக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.
அதேபோல வனப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போதுள்ள வனப்பகுதியை 16% இலிருந்து 30% ஆக அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அது மிகவும் காலத்திற்குப் பொருத்தமான ஒரு நடவடிக்கையாகும். அப்படியானால், அதற்கும் இந்தக் காணிகளைத் தான் நாங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஆனால், மக்களுக்குச் சொந்தமான உறுதியான காணிகள் அல்லது அவர்கள் முன்னர் பயன்படுத்திய காணிகள் இருக்குமானால், அந்தக் காணிகளை விடுவித்துக் கொடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
ஏற்கனவே அந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பாதுகாப்பு அமைச்சின் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி கூட இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்களுக்குத் தேவையான காணிகளை வழங்குவதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் – என்றார்.



