புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள் குறித்த கூட்டமைப்பின் யோசனைகளை ஆராய்வதற்கு அரசு தயார்! – நீதியமைச்சர்

இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளை அரசாங்கம் ஆராயவுள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியம் தொடர்பான யோசனை குறித்து மேலும் ஆழமாக ஆராயவேண்டியுள்ளது.

இது இலங்கையின் வங்கி துறை உட்பட வழமையான வழிமுறைகள் ஊடாக இடம்பெறவேண்டும், அவற்றிற்கு வெளியே இது இடம்பெற முடியாது.

யுத்தத்தின் பின்னரும் நாங்கள் சில சலுகைகளை வழங்கினோம், அதனை போன்று வரிச்சலுகைகள் வழங்கப்படலாம். புலம்பெயர்ந்தவர்கள் இங்கு முதலீடு செய்தால் நீண்டகால குத்தகைக்கு நிலங்களை அரசாங்கம் வழங்கலாம். உலகின் பல பகுதிகளிலும் இலங்கையிலும் இது இடம்பெறுகின்றது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது குறித்து உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் உயர் வட்டாரங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது நாங்கள் அதனை ஆராய்வதற்கு இணங்கினோம் இதற்கான பொறிமுறைகளை உருவாக்கவேண்டும் அமைச்சர் அலி சப்ரி தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இது குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் அதன்பின்னர் இந்த விடயத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் என தெரிவித்துள்ளன.

Leave a Reply