
மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் வீட்டு வளவுக்குள் வந்தவர்கள் துரத்திச் சென்ற இளைஞனைக் காணவில்லை என்று அவரது உறவினர்களால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு, நவக்கிரியில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அருந்தவராசா சயந்தன் (வயது – 30) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
வீட்டு வளவுக்குள் யாரோ பாய்ந்து நுழைந்துவிட்டு வெளியே செல்வதை அவதானித்த சயந்தன், வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் .வெளியே சென்ற அவரை, வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர். அதன்பின்னர் சயந்தன் வீடு திரும்பவில்லை.
அதேநேரம், கடந்த 12 ஆம் திகதி சயந்தனின் வீட்டுக்கு வந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் வெட்டுக்காயத்துக்கு உள்ளான சயந்தனின் தந்தை தற்போதும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். என்று குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

