ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இல்லத்துக்குச் செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் நேற்று இரவு திடீரென பெரும் திரளான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும் எண்ணிக்கையான இளைஞர், யுவதிகள் அங்கு திரண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஜனாதிபதியின் இல்லத்துக்குச் செல்லும் வீதியை மறித்துப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் நகரவிடாது தடுக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் மேற்கொண்டோர் அதையும் மீறி ஜனாதிபதியின் இல்லத்துக்குள் நுழைய முயன்றதால் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இரவு 10.45 மணியளவில் முதலாவது பொலிஸ் தடையை உடைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டோர் முன்னேறியதால் நிலைமை இன்னும் மோசமானது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்துக்கு எதிராகவுமே பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும், ஜனாதிபதி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகள் வலியுறுத்தினர்.
தன்னிச்சையாகவே பெருந்திரளான இளைஞர், யுவதிகள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். “ஜனாதிபதி அவர்களே உங்கள் வீட்டில் மட்டும் எவ்வாறு மின்சாரம்?”, “எங்களுக்கு ஜனாதிபதி வேண்டாம்” என்று அவர்கள் கோஷமிட்டதைக் காண முடிந்தது.
நேரம் செல்லச் செல்ல அங்கு திரண்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருந்தது. இரவு 10 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இல்லம் உள்ள பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நாட்டில் மின் தடை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரான காலப்பகுதியில் முதல்தடவையாக நேற்று அந்தப் பகுதியில் மின் தடைப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இணைய சேவையும் முடங்கியது.
இரவு 10 மணிக்குப் பின்னர் இணைய சேவை சீராக இல்லாததால் அந்தப் பகுதியில் இருந்து சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவேற்றப்பட்டு வந்த நேரடிக் காட்சிகளுக்குத் தடங்கல் ஏற்பட்டது.
ஜனாதிபதியின் வீடு முழுமையாக மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் எவரும் நுழையவோ, வெளிச் செல்லவோ முடியாத நிலைமை காணப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியின் இல்லத்தின் வாயிலில் பெருமளவிலான பொலிஸாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இரவு 10.15 மணியளவில் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் கலைக்கப்பட்டனர்.
சிதறி ஓடிய மக்கள் ஆத்திர மேலீட்டால் பொலிஸாரின் வாகனங்கள் மீதும், இராணுவத்தினரின் பஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். நீர்த்தாரைப் பிரயோகத்தைத் தொடர்ந்து பல தடவைகள் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்ட மக்கள் சிதறி ஓடி பாதுகாப்பான இடங்களை நாடியதுடன், ஜனாதிபதிக்கு எதிராகத் தொடர்ந்து கோசங்களை எழுப்பினர். மக்கள் கூட்டம் அங்கிருந்து அகல மறுத்து தொடர்ந்து இரவிரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்தச் செய்தி அச்சுக்கு போகும்வரை ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பதற்ற நிலைமை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.





