மலசலகூட குழிக்குள் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

பாணந்துறை பின்வத்தை விடுமுறை விடுதி ஒன்றில் கழிவறை குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று (31) அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாணந்துறை பின்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கணேமுல்ல பொல்லான பகுதியைச் சேர்ந்த 29 வயதான எச்.கே.துஷாரி தில்ஹானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

அவரது சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரது கணவர், தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் அடையாளம் காட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்,சுமார் ஒன்றரை வருடங்களாக வீட்டை விட்டு வெளியில் வசித்து வந்த உயிரிழந்துள்ளார். அவ்வப்போது வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒரு வருடமாக கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். அத்துடன், ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்.

அண்மை நாட்களாக, கடவத்தை, டிமோ சந்தியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் பணிபுரிந்த போது, பாணந்துறை பின்வத்தை விடுமுறை விடுதியின் முகாமையாளருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 21 அல்லது 22ஆம் திகதி தனது நண்பரான வெளிநாட்டு பிரஜை ஒருவருடன், பின்வத்தையிலுள்ள ‘ஓஷன் வில்லா’ என்ற ஹோட்டலுக்கு பெண்ணை அழைத்துச் சென்று அங்கு 605ஆம் இலக்க அறையில் தங்க வைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, விடுதி ஊழியர்கள் இருவருக்கும் பெண்ணுடன் உறவு ஏற்பட்டுள்ளது.

முகாமையாளர் மற்றும் சில பணியாளர்கள் மட்டுமே உள்ள சிறிய ஹோட்டலின் உரிமையாளர் வேறு இடத்தில் இருக்கிறார். இதனால் ஹோட்டலில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து உரிமையாளருக்கு தெரிவதில்லை.

இதனால் முகாமையாளர் அடிக்கடி யுவதிகளை அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டதுடன், யுவதிகள் விபச்சாரத்தில் ஈடுபடவும் வசதியேற்படுத்திக் கொடுத்துள்ளார்.

விடுதியில் பெண் கொல்லப்பட்டிருக்கலாமென்ற தகவல் உரிமையாளருக்கு கிடைத்ததையடுத்து, 29ஆம் திகதி விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு கழிவறை குழி பகுதியின் மூடிப்பகுதியில் புதிய மண் இட்டு நிரப்பப்பட்டுள்ளதை அவதானித்து, அது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் கழிவறை குழி திறக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

விடுதி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். முகாமையாளர் தலைமறைவாகி விட்டார்.

பெண்ணின் மரணம் குறித்த தகவல்கள் வெளியாகியதையடுத்து, அவரது நண்பர் ஒருவர் பொலிசாரை அணுகி தகவல் வழங்கியுள்ளார். அந்த விடுதி அறையில் இருந்தபடி ரிக் ரொக் வீடியோ உருவாக்கி நண்பர்களிற்கு பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோ காட்சிகளின் பின்னணியிலிருந்த இடமும், சடலம் மீட்கப்பட்ட புகைப்படங்களையும் பார்த்ததால் சந்தேகமடைந்த நண்பர் பொலிசாரை அணுகினார்.

இதனடிப்படையில் பெண்ணின் அடையாளம் உறுதியானது.

கைது செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவரின் வாக்குமூலத்தின்படி, அறை எண் 605 இல் பொருத்தப்பட்ட மின்விசிறியில் அந்தப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், பின்னர் முகாமையாளரும் பணியாளர்களும் உடலை கீழே இறக்கி, கழிப்பறைகுழியில் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொல்லப்பட்ட பெண்ணை அந்த விடுதியில் தங்க வைத்த முகாமையாளர், அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாணந்துறை மேலதிக நீதவான் மற்றும் நீதவான் லஹிரு சில்வாவின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து குறித்த பெண்ணை உல்லாச விடுதிக்கு அழைத்து வந்ததாக கூறப்படும் உல்லாச விடுதியின் முகாமையாளர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தூக்கிலிடப்பட்டாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டாரா? என பல கேள்விகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று 1ஆம் திகதி நடைபெறவுள்ளது

Leave a Reply