ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் சிலர் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியினால் சிக்குண்டுள்ள மக்கள் அதனை பொறுத்துக் கொள்ளமுடியாத நிலையில் நேற்றைய தினம் இரவு அவரது இல்லத்திற்கு முன்னால் அமைதியாக முறையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் சமூக ஊடகங்கள் ஊடாகப் பகிரப்பட்ட நிலையில் மக்கள் பல இடங்களில் இருந்து வருகை தந்து போராட்டத்தினை முன்னெடுத்தனர். நிலையினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர்பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் விசேட அதிரப்படை மற்றும் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
பொலிஸாரின் வாகனம் போராட்டக்காரர்களை மோதியதை அடுத்து பேருந்து தீ வைக்கப்பட்டது. மேலும் பல வாகனங்கள் தீவைக்கப்பட்டு போராட்டம் பெரும் கலவரமாக மாறியது.
இதன்போது பாதுகாப்புப் படையினர் வானை நோக்கி வேட்டுக்களை வைத்து கலைக்க முற்பட்டனர். அதுவும் தோல்வியில் முடியவே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் பின்னர் 54பேர் கைது செய்யப்பட்டனர். மிரிஹான பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








